குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் பல்லவி கூறியுள்ளார்.
தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் திருப்பூர் மற்றும் சென்னையை சேர்ந்த இரண்டு குழுவினர் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் மலையேற்றம் சென்ற 30-க்கும் மேற்பட்டோர் சிக்கினர். காட்டுத்தீ குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த வனக்காவலர்கள், ஊர்மக்களுடன் இணைந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் தற்போது வரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீக்காயங்களுடன் அவர்கள் தேனி, மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குரங்கணி காட்டு தீயில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்று தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் கூறியுள்ளார். இதில் 6 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள், 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மீட்கப்பட்ட 27 பேரில் 10 பேருக்கு எவ்வித காயமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சென்னையை சேர்ந்த புனிதா, அருண், பிரேமலதா, சுபா, விபின், அகிலா மற்றும் ஈரோட்டை சேர்ந்த விஜயா, விவேக், தமிழ்ச்செல்வன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது என தேனி ஆட்சியர் கூறியுள்ளார்.