தமிழ்நாடு

குறையாத கொரோனா மரணங்கள்.. தமிழகத்தில் மேலும் 65 பேர் உயிரிழப்பு..!

குறையாத கொரோனா மரணங்கள்.. தமிழகத்தில் மேலும் 65 பேர் உயிரிழப்பு..!

webteam

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு குறைந்தாலும், உயிரிழப்பு நாள்தோறும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாள்தோறும் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், இன்று 2வது நாளாக நான்காயிரத்திற்கும் குறைவானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 3,616 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் இரண்டாயிரத்து மேற்பட்டவர்கள் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது மிகவும் குறைந்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 4,545 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 71,116 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு சரிவை கண்டு இருந்தாலும், கொரோனா மரணங்கள் இன்னும் அதே நிலையில் தான் உள்ளது. தமிழகத்தில் மேலும் கொரோனா பாதிப்புக்கு 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 20 பேரும், அரசு மருத்துவமனையில் 45 பேரும் உயிரிழந்தனர். எவ்வித இணை நோய்களும் இல்லாமல் 13 பேர் மரணமடைந்துள்ளனர். மாவட்ட வாரியாக பார்த்தால் இன்றைய நிலவரப்படி சென்னையில் மட்டும் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, மதுரையில் தலா 8 பேர் மரணமடைந்துள்ளனர். திருவள்ளூரில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 1,636 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதில், சென்னையில் மட்டும் 1,120 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 136 பேரும், திருவள்ளூரில் 105 பேரும், மதுரையில் 77 பேரும் உயிரிழந்துள்ளனர். சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 516 பேர் உயிரிழந்துள்ளனர்.