தமிழகத்தில் மேலும் 64 பேர் கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,756 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1261 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 3,051 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்றே குறைய தொடங்கினாலும், கொரோனா உயிரிழப்புகள் நாள்தோறும் ஒரே அளவில் தான் உள்ளது. 39வது நாளாக இன்றும் இரட்டை இலக்கில் கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலும் 64 உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதில், தனியார் மருத்துவமனைகளில் 21 பேரும், அரசு மருத்துவமனைகளில் 43 பேரும் உயிரிழந்துள்ளனர். இணை நோய்கள் வேறு எதுவும் இல்லாமல் கொரோனா தாக்கத்தால் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக பார்த்தால் அதிகபட்சமாக சென்னையில் 26 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும், திருவள்ளூரில் 6 பேரும், ராணிப்பேட்டையில் 5 பேரும், தேனியில் 4 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 1,700 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதில், சென்னையில் மட்டும் 1146 பேர் பலியாகியுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 136 பேரும், திருவள்ளூரில் 111 பேரும், மதுரையில் 86 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு சதவீதம் 1.38 ஆக உள்ளது.