தமிழ்நாடு

“திமுக எங்களுக்கு எம்.பி சீட் கொடுக்காதது வருத்தம்” - கே.எஸ்.அழகிரி பிரத்யேக பேட்டி

“திமுக எங்களுக்கு எம்.பி சீட் கொடுக்காதது வருத்தம்” - கே.எஸ்.அழகிரி பிரத்யேக பேட்டி

webteam

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக தங்களுக்கு ஒரு இடம் கொடுத்திருக்கலாம் என்றும், கொடுக்காதது வருத்தம் தான் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி புதியதலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அதில், “தி.மு.க மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பை எங்களிடம் கூறிவிட்டுதான் அறிவித்தார்கள். தமிழகத்தில் என்னிடம் சொன்னார்கள். டெல்லி தலைமையிடமும் சொல்லியிருப்பார்கள். இன்றைய அரசியல் சூழ்நிலையில் தி.மு.க கொடுக்கும் நிலையிலும், நாங்கள் வாங்கும் நிலையிலும் இருக்கிறோம்.

எங்களுக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கியிருந்தால் மகிழ்ந்திருப்போம். அப்படி ஒதுக்காதது வருத்தம்தான். இது வருத்தம்தானே தவிர, கோபம் அல்ல. வருத்தம் என்பது வேறு, கோபம் என்பது வேறு. தமிழகத்தில் இருக்கின்ற லட்சக்கணக்கான தேசிய தோழர்களின் மன உணர்வை இந்த ஒருவரியில் தான் சொல்ல முடியும். எங்களுக்குள் உடன்பாடு இருந்ததா ? என தெரியவில்லை.

உடன்பாடு ஏற்பட்ட போது நான் அங்கு இல்லை. உடன்பாடு எழுத்துப்பூர்வமாக இருந்ததா ? அல்லது கருத்தொற்றுமையால் ஏற்பட்டதா ? என்பதும் எனக்கு தெரியாது. எனவே இதுகுறித்து கருத்து சொல்வதில் பொருள் இல்லை என்பதே எனது கருத்து” என கூறினார்.