கஜா புயல் உதவித் தொகையாக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை சுமார் 87 கோடியே 88 லட்சம் ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நவம்பர் 16-ஆம் தேதி ஏற்பட்ட கஜா புயல் காரணமாக யாரும் நினைத்துப் பார்க்காத அளவுக்கு வரலாறு காணாத பேரழிவை டெல்டா மாவட்ட மக்கள் சந்தித்தனர். தமிழ்நாட்டின் எட்டு மாவட்டங்களில் ஊடுருவிய கஜா புயல், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் உயிர்ச்சேதங்களையும், பொருட்சேதங்களையும், உறவாக வளர்த்து வந்த ஆடு, மாடுகளையும் சூறையாடி சென்றது.
புயல் தாக்கி ஒரு மாதத்தை எட்டியும் டெல்டாவின் பல கிராமங்களில் இன்னும் மின்சாரம் வரவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். டெல்டா மாவட்ட மக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைத்தனர்.
ஆறாவடுவாக மாறிய கஜா புயலினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் டெல்டா மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் இப்போதும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, அரசியல் கட்சியினர், திரையுலகினர், தனியார் நிறுவனத்தினர், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தோர், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நன்கொடை அளித்து வந்தனர். அதன்படி பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்-லைன் மூலமாகவும் இதுவரை 87 கோடியே 88 லட்சத்து 62 ஆயிரத்து 791 ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.