தமிழ்நாடு

வேளாண் சட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லை - முதல்வர் பழனிசாமி

வேளாண் சட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லை - முதல்வர் பழனிசாமி

rajakannan

மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 8வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் அந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இதனிடையே, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்திலும் எதிர்க்கட்சிகள் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு களத்திலும் இறங்கி போராடி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என திமுகவும் அறிவித்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், தேவையில்லை எனில் விற்பனை ஒப்பந்தத்தில் இருந்து விவசாயிகள் விலகிக் கொள்ளலாம் என சட்டத்தில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.