முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, தலைமைச் செயலகத்தை கட்சி அலுவலகம் போல் பயன்படுத்தி வருவதாக, திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டினார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகமே போராட்டக்களமாக மாறி இருக்கும் சூழலில், தலைமைச் செயலகத்தில் மக்கள் பிரச்னைகள் குறித்து ஆலோசிக்காமல், அங்கு கட்சி விவகாரம் குறித்து ஆட்சியாளர்கள் ஆலோசித்து வருவதாகச் சாடியுள்ளார். ஏற்கனவே தலைமைச் செயலகத்தில் அதிமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றபோது திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்ததை அவர் சுட்டிக் காட்டினார். தமிழகத்தின் நிர்வாகச் சின்னமாக இருக்கும் தலைமைச் செயலகத்தில், அதிமுக கூட்டம் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என தனது அறிக்கையில் டி.கே.எஸ் இளங்கோவன் வலியுறுத்தினார்.