நீலகிரி மாவட்டத்தில் 494 கோடி ரூபாய் மதிப்பீட்டில், முடிவுற்ற ஆயிரத்து 703 திட்டப் பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்.மேலும் 130 கோடி ரூபாய் செலவில் 56 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தார். 15 ஆயிரத்து 634 பேர் பயன்பெறும் வகையில் 102 கோடி ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், நீலகிரி மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா, ஆயிரம் பழங்குடி மக்களுக்கு கான்க்ரீட் வீடுகள் அமைத்துத் தரப்படும் என்றார். தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு சதி செய்து வருவதாக விமர்சித்த முதல்வர், தமிழ்நாட்டின் தொகுதிகள் குறையாது என இந்த மண்ணிலிருந்து பிரதமர் மோடி உறுதி தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
முன்னதாக உதகையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முதல்வர் திறந்து வைத்தார். 45 ஏக்கர் பரப்பளவில்,143 கோடியே 69 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 700 படுக்கை வசதிகள் கொண்டதாக இந்த மருத்துவமனை அமைந்துள்ளது.
மருத்துவக்கல்லூரியை திறந்து வைக்க வந்த முதல்வருக்கு தோடர் பழங்குடி மக்கள் தங்கள் பாரம்பரிய கலாசாரப்படி வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் மோடி தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ராமேஸ்வரத்தில் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அதே நாளில் மாநிலத்தின் மேற்கு முனையில் உள்ள நீலகிரியில் முதல்வர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றது கவனிக்கத்தக்க நிகழ்வாக
இருந்தது.