தமிழ்நாடு

"திமுக ஆட்சியை நினைத்து திமுகவினரும் மக்களும் வருந்துகின்றனர்" - மதுரையில் இபிஎஸ் பேச்சு!

"திமுக ஆட்சியை நினைத்து திமுகவினரும் மக்களும் வருந்துகின்றனர்" - மதுரையில் இபிஎஸ் பேச்சு!

webteam

சற்று கவனக்குறைவாக இருந்ததால் அதிமுக அமைக்க வேண்டிய ஆட்சியை திமுக கைப்பற்றிவிட்டது என்றும், பொம்மை முதல்வராக தமிழக முதலவார் உள்ளார் என்றும் பேசியுள்ளார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

திமுக அரசை கண்டித்து மதுரை பழங்காநத்தத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வை கண்டித்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “மதுரை மாவட்டம் என்பது அதிமுகவின் எக்கு கோட்டை. சற்று கவனக்குறைவாக இருந்ததால் அதிமுக அமைக்க வேண்டிய ஆட்சியை திமுக கைப்பற்றியது, ஏனோதானோ என இருந்ததால் திமுக ஆட்சி அமைத்துவிட்டது. திமுக பெரும்பான்மையாக வெற்றிபெறவில்லை. திமுகவிற்கு வாக்களித்த மக்கள் தவறு செய்துவிட்டோம் என வருந்துகின்றனர். பல திமுகவினரே திமுக ஆட்சியை விரும்பவில்லை.

பொம்மை முதல்வராக தமிழக முதல்வர் உள்ளார், பொம்மை போல் காலையில் கீ கொடுத்து வைத்தால் மாலை வரை சுற்றுவார். முக ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 2 திட்டங்களை செய்துள்ளார், ஒன்று கலைஞர் நினைவு நூலகம், மற்றொன்று எழுதாத பேனாவை கடலில் வைக்க உள்ளார். பூமியில் பேனா வைத்தால் யாராவது எடுத்துவிட்டு சென்றுவிடுபவார்கள் என்பதற்காக கடலில் அமைக்க உள்ளார். கலைஞரின் புகழிற்காக தான் திட்டங்கள் செய்து வருகிறார் மக்களுக்கான திட்டங்களை அவர் செய்யவில்லை. ஏழை மக்களுக்காக என்ன திட்டங்களை கொண்டு வந்துள்ளீர்கள்? என்று கேள்வி எழுப்பியவர், அதிமுக மக்களுக்கான பல நல்ல திட்டங்களை செய்துள்ளதால் அதிமுகவினர் நெஞ்சை நிமிர்த்தி நடமாடி வருகிறோம் என்றார்.

2024ல் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது. ஆட்சி பொறுப்பேற்று 16 மாத காலமாக எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. ஆனால் தமிழக மக்களுக்கு 2 போனஸ் வழங்கியுள்ளது. ஒன்று மின்கட்டனம் உயர்வு, மற்றொன்று சொத்துவரி உயர்வு. 2 போனஸ் கொடுத்த ஒரே அரசு திமுக அரசு தான். இலவச பேருந்தை ஓசி பேருந்து என கூறி பொன்முடி பெண்களை கொச்சைப்படுத்தியுள்ளார். உரிமை தொகை வழங்குவதற்கு சில்லறை மாற்றுவதாக துரை முருகன் கூறியுள்ளார். இதுதான் திராவிட மாடலா.??

தமிழகத்தில் 53 சதவீதம் மின்கட்டனம் உயர்த்தி உள்ளார்கள். திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த தேசியமய வங்கிகளில் மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன் ரத்து செய்யப்படவில்லை. படித்தவர்களையும் படிக்காதவர்களையும் ஏமாற்றியதே திராவிட மாடல்.

அதிமுக கொண்டு வந்த திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டியும் ரிப்பேன் வெட்டியும் துவக்கி வைத்துள்ளது மட்டுமே திமுகவின் சாதனை . தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.

468வது தேர்தல் அறிக்கையில் கட்டுமான பொருட்களை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இணைக்கப்படும் என்ற அறிவிப்பும் நிறைவேற்றவில்லை. 487வது தேர்தல் அறிக்கையில் சொத்துவரி உயர்த்தப்படாது என அறிவித்த திமுக தற்பொழுது ஏன் சொத்துவரியை 100 சதவீதம் உயர்த்தியது. ஆட்சிக்கு வந்தவுடன் திருமண உதவித்தொகையை உயர்த்துவதாக தேர்தல் வாக்குறுதியை கூறிய திமுக தற்பொழுது அந்த திட்டத்தை நிறுத்தியது நியாயமா?. முதியோர் உதவித்தொகையும் நிறுத்தப்பட்டுள்ளது.

எல்லாவற்றையும் ஏமாற்றிய முதல்வர் தான் முக.ஸ்டாலின். ஏழை எளிய முதியோர்களுக்கு வழங்க வேண்டிய முதியோர் உதவித்தொகை திட்டத்தில் அரசியல் செய்யாமல் முறையாக வழங்க வேண்டும். அதிமுக கொண்டுவந்த திட்டங்களை திமுக நிறுத்தியது நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும்” என்றார்.

பின்னர் பேசிய செல்லூர் ராஜூ, “இன்று ஆட்சி நடைபெறவில்லை; போட்டோ ஷூட் மட்டுமே நடைபெறுகிறது. முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்ஜிஆர் மாணவர்களோடும் மக்களோடும் சேர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார்கள். ஆனால் முக.ஸ்டாலின் காலை உணவு திட்ட துவக்க நிகழ்வில் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுவது போல் போஸ் கொடுத்தார். மதுரையில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் சாப்பாடு ஊட்டும்போது குழந்தையின் உமிழ்நீரை தண்ணீரை ஊற்றி கழுவினார்.

அமைச்சர் பொன்முடி பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தை ஓசி பயணம் என சொல்லியது கண்டிக்கத்தக்கது” என்று கூறினார்.