தமிழ்நாடு

போலீஸ் தற்கொலையில் தமிழகத்திற்கு முதலிடம்!

போலீஸ் தற்கொலையில் தமிழகத்திற்கு முதலிடம்!

webteam

பணிச்சுமை காரணமாக தமிழக காவல்துறையைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் காவலர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் என்பது அண்மைக்கால செய்தியாக மட்டுமல்லாமல், நீண்ட வருட தொடர்கதை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

இதைத்தொடர்ந்து சென்னை அயனாவரத்தில் எஸ்.ஐ ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துண்டார்.

இதற்கிடையே பணிச்சுமை காரணமாக வேலையை விட்டு விலகுவதாக ஒரு காவலர் உருக்கமான வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்தச் சம்பவங்களை பார்க்கும் போது, அண்மைக்காலமாக காவலர்கள் தற்கொலை அதிகரிப்பது போல் தோன்றுவதாக பலர் தெரிவித்திருந்தனர். ஆனால் இது நீண்ட கால தொடர்கதைதான் என்பதை தற்போது வெளியாகியுள்ள ஆய்வு உறுதிசெய்துள்ளது.

அந்த ஆய்வின் படி, 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத நிலவரப்படி, தமிழகத்தில் அந்த ஆண்டு 166 காவலர்கள் தற்கொலை செய்து உயிரிழந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பட்டியலில் 161 பேருடன் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும், 61 பேருடன் கேரளா மூன்றாவது இடத்திலும் உள்ளது. இவர்கள் அனைவரும் சொந்தப்பிரச்னை, பணிச்சுமை, மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டுள்ளது.