தமிழ்நாடு

நேபாள விளையாட்டு மைதானத்தில், மர்மமான முறையில் உயிரிழந்த தமிழக விளையாட்டு வீரர்

webteam

திருவள்ளூரை சேர்ந்த வாலிபால் விளையாட்டு வீரரொருவர், நேபாளத்தில் மைதானத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை ஆட்சியரிடத்தில் புகார் மனு அளித்துள்ளார். உரிய விசாரணை நடத்தி சடலத்தை பெற்று தரவும் கோரிக்கை வைத்துள்ளார்.

திருவள்ளூர் அருகே கைவண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் நேருதாசன். இவரது மூத்த மகன் ஆகாஷ் (27), இளைய மகன் ஆதவன்(24). வாலிபால் விளையாட்டு வீரரான ஆகாஷ், பி.இ பட்டதாரி. இவர் தமிழ்நாடு மற்றும் இந்திய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். தனியார் பள்ளி ஒன்றில் விளையாட்டு ஆசிரியராகவும் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கோவையில் உள்ள யூத் ஸ்போர்ட்ஸ் ப்ரமோஷன் அசோசியேசன் என்ற அமைப்பு மூலம் கடந்த 21-ஆம் தேதி நேபாளம் நாட்டில் உள்ள போக்ரா நகரத்தில் ரங்கசாலா விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்ற வாலிபால் போட்டியில் கலந்து கொள்ள சென்றிருந்தார்.

இந்த நிலையில் நேற்று (25.12.2022) காலை 11 மணியளவில் நேபாளம் நாட்டில் உள்ள போக்ரா நகரத்தில் ரங்கசாலா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டில் முதல் சுற்றில் வெற்றி பெற்று ஓய்வு எடுக்க சென்றுள்ளார். பின்னர் ஓய்வு அறையில் ரத் த வாந்தி எடுத்து மயக்கம் அடைந்த ஆகாஷை சக விளையாட்டு வீரர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஆகாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆகாஷின் பெற்றோருக்கு பயிற்சியாளர் நாகராஜன் தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் நேபாளம் நாட்டில் உயிரிழந்த மகனின் உடலை கொண்டு வருவதில் சிரமம் இருப்பதால் ஆகாஷின் உறவினர்கள் மற்றும் கைவண்டூர் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட உறவினர்கள் மற்றும் இளைஞர்கள் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக மனு அளித்தனர். அப்போது வாலிபால் விளையாட்டில் ஆகாஷ் பெற்ற பரிசு பொருட்களுடன் வந்து மனு அளித்தனர். அதில் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்த ஆகாஷின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், உரிய முறையில் விசாரணை செய்து சடலத்தை பெற்று தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.