உதயநிதி ஸ்டாலின் Pt web
தமிழ்நாடு

திமுக தயவில் தான்., சட்டப்பேரவையில் உதயநிதி பேசியது என்ன? முழு விபரம்!

திமுகவின் வாக்குகளை வாங்கிய எங்களுடைய கூட்டணி கட்சிகள் ஆளுங்கட்சி தரப்பில் தற்போது அமர்ந்திருக்கிறார்கள். எங்களுடைய தயவில் தான், இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Premkumar S

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று, பிற கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கும் நிலையில், முழுமையான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம், இன்று சட்டசபையில் மீண்டும் தொடங்கியது. அப்போது சட்டமன்றப் பேரவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, உரிமை மீறல் பிரச்னை மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து அவையில் பேச அதிமுக தரப்பில் கோரப்பட்டது.

அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்காத காரணத்தால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. அதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், முதல்வர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி தனது உரையாடினார். தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்துக் குறித்துப் பேசிய அவர், சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு முறை மற்றும் தேசிய கீதம் ஒருமுறை பாடுவது தான் வழக்கம். ஆனால், ஏன் தேசிய கீதம் மட்டும் ஏன் 2 முறை பாடப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின்

தவெக உறுப்பினர்கள் பேசும்போது, ஆளுநர் முன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிவிட்டோம்; ஆளுநர் மகிழ்ச்சியாக இருந்தார் என இவர்கள் அதிகமாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தவெகவினருக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதைன் விட ஆளுநர் மகிழ்ச்சியாக இருந்தது தான் அவசியம் போல; ஆளுநருக்கும் தவெகவுக்கும் என்ன சமரசம் நடந்தது என கேள்வி எழுப்பினார்.

இதற்கு இடைமறித்த சபாநாயகர் ஜே.டி.சி. பிரபாகர், தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்பட வேண்டும் என்ற நமது அனைவரின் நோக்கத்தின்படியே தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டிருக்கிறது. அதேபோல, தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டத்தில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பினார். அதேசமயம், எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்கு பதிலளித்த பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஆளுநர் முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டிருப்பது தவெக அரசின் வெற்றி. சமரம் என கூறுவது தவறு எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, ஆளுநர் உரைகுறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் உரைக்கும் கள எதார்த்தத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. குறிப்பாக, ஆளுநர் உரை ஆளுங்கட்சி ரீல்ஸ் போடுவதற்கு உதவியாக இருக்கிறதே தவிர; மக்களுக்கு பயனுள்ளதாக இல்லை. ஆளுங்கட்சியின் நிறை குறைகளை விமர்சிப்பதுதான், எதிர்க்கட்சிகளின் பணி. எனினும், எங்களுக்கு முந்தைய எதிர்க்கட்சிகளை விட அதிக பணி இருக்கிறது. ஏனெனில், திமுகவின் வாக்குகளை வாங்கிய எங்களுடைய கூட்டணி கட்சிகள் ஆளுங்கட்சி தரப்பில் தற்போது அமர்ந்திருக்கிறார்கள். எங்களுடைய தயவில் தான், இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, மகளிர் உரிமைத் தொகையை தொடர்ந்ததற்கும், காலை உணவுத் திட்டத்தை 8 வகுப்பு வரை நீடித்ததற்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்ததுடன், நான் முதல்வன் திட்டத்தை அரசு முடக்க நினைப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். அதேபோல, டெல்லியில் சென்று தமிழ்நாடு பெண்களின் முன்னேற்றம் குறித்து முதல்வர் விஜய் பேசினார். திரைப்படத்தில்தான் ஐந்து நிமிடத்தில் ஏழையாக இருப்பவன் பணக்காரன் ஆகிவிடலாம். ஆனால் நிஜத்தில் ஒரே மாதத்தில் பணக்காரர் ஆகிவிட முடியாது. எனவே முதலமைச்சர் சொன்ன சாதனை எல்லாம் யாருடைய ஆட்சியில் வந்தது என்று மக்கள் பார்த்துக்கொண்டு உள்ளார்கள் என விமர்சித்துப் பேசினார்.

மேலும், திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு தவெக தான் கொண்டு வந்துள்ளது என ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல, அறநிலையத்துறையின் சொத்துக்கள் கோவில் பணிகளுக்கே பயன்படுத்தப்படும் என கூறியிருக்கிறார்கள். இது, வலதுசாரி பாஜகவின் நோக்கமும் இதுதான். அதைதான் தவெகவும் பிரதிபலிக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு இடைமறித்து பதிலளித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோயில்களில் கடந்த ஆட்சியில் வணிக நோக்கத்தில் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 500 பேர் வரக்கூடிய கோயிலுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் ஏன்? கோயில் நிதியை கமர்சியலாக பயன்படுத்தியது ஏன்?’ என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முன்னாள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ”ஆய்வின் அடிப்படையில் தான் மல்டி லெவல் பார்க்கிங் ஏற்படுத்தப்பட்டது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டிப் பெரம்பூர் தொகுதியை மின்வெட்டில் நம்பர் 1 ஆக மாற்றியுள்ளார் முதலமைச்சர் விஜய். அண்ணன் கையில் பவர் வந்தால் தமிழ்நாடு மாறும் என நினைத்தோம்..ஆனால் தமிழ்நாட்டுக்கே பவர் போயிடுச்சுன்னு தவெ.கவினர் பேசுகின்றனர். முன்பெல்லாம் புயல் மழைக்குத்தான் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள். ஆனால் இந்த ஆட்சியில்தான் கரண்ட் இல்லை என்று லீவு விடுகிறார்கள்.

தவெக. ஆஃபிஸ்லயே பவர் கட் ஆகிருக்கு. ஆளுங்கட்சியா இருந்தும் பனையூர்லயே பவர் இல்லையே என அங்கு வந்தவர்கள் புலம்பிடு போனதா தகவல் வந்துள்ளது என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார். தொடர்ந்து, தவெக நிர்வாகிகள் மீதான பாலியல் புகார். பள்ளிகளில் தவெகவினர் ரீல்ஸ் வெளியிடுவது உள்ளிட்டவற்றையும் விமர்சித்துப் பேசியிருக்கிறார்.