ஆன்லைன் ரம்மி போன்ற இணைய விளையாட்டுகளை தடை செய்யும் சட்ட மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் இம்மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். இந்த சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
மாணவர்கள், ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்பு:
• சமீபத்தில் 2 லட்சம் பள்ளி ஆசிரியர்களிடம் அரசு ஆய்வு நடத்தியது. அதில், ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி கேட்கப்பட்டது. அதில், மாணவர்களின் கல்வியிலான கவனம் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாக 74 சதவீத ஆசிரியர்கள் கூறினர். மாணவர்களின் அறிவுத் திறனில் குறைவு ஏற்பட்டு இருப்பதாகவும், எழுத்துத் திறன், படைப்பாற்றல் திறன் குறைந்து கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
• 67 சதவீத ஆசிரியர்கள், அந்த மாணவர்களுக்கு கண் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மாணவர்களிடையே சுயமரியாதை குறைந்திருப்பதையும், அதிக கோபமுள்ளவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார்கள் என்பதையும் 77 சதவீதம் ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.
• பொதுமக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில், மொத்தம் 10 ஆயிரத்து 735 இ-மெயில் வந்ததில் 10 ஆயிரத்து 708 பேர், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.
• இவற்றையெல்லாம் அரசு கருத்தில் கொண்டு, ஆன்லைன் விளையாட்டுகள், சூதாட்டங்களை, திறனை சோதிக்கும் பழைய அளவுகோலின்படி கணக்கிடக் கூடாது என்றும் அதை தற்போதைய தொழில்நுட்பங்களின்படி வேறுபடுத்தி ஆய்வு செய்தது.
பண ஆசைகாட்டி அடிமைப்படுத்துகிறது:
• அந்த ஆன்லைன் விளையாட்டு, விளையாடுபவரை பண ஆசைகாட்டி அடிமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதையும், அதன் மூலம் உடல்நலனுக்கு மட்டுமல்லாமல் பொருளாதார சுரண்டலுக்கு வழிகோலுகிறது என்றும் அதனால் சமூக, பொருளாதாரத்துக்கு கேடு விளைவிக்கிறது என்றும் தெரிகிறது.
• குறிப்பாக, இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அவர்களிடம் எதிர்மறை குணங்கள் உருவாகின்றன. திறன் குறைபாடு ஏற்படுகிறது. இந்த விளையாட்டுகளால் தற்கொலை, குடும்பங்கள் சிதறுவது, பொது சுகாதார பாதிப்பு, சமூக ஒழுக்கம் கெடுவது போன்ற பாதிப்புகள் நேர்கின்றன.
• நீதிபதி கே.சந்துருவின் அறிக்கையையும், சர்வே அறிக்கையையும், பொதுமக்கள் உள்பட சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகளையும், அரசு கவனமுடன் பரிசீலித்து, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யவும், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவும் முடிவு செய்து சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படவுள்ளது.
ஆன்லைன் விளையாட்டு ஆணையம்
• இந்த சட்டமசோதாப்படி தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தை அரசு அமைக்கிறது. இந்த ஆணையத்திற்கு, ஓய்வு பெற்ற, தலைமைச் செயலாளர் பதவிக்கும் குறையாத பதவி வகித்தவர் தலைவராக இருப்பார். மேலும் ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி., தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர், ஆன்லைன் விளையாட்டில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.
• இந்த ஆணையம், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும். உள்ளூர் ஆன்லைன் விளையாட்டை அளிப்பவர்களுக்கு பதிவு சான்றிதழை வழங்கும். விளையாட்டின் தன்மைப்படி அதை வரிசைப்படுத்தும். ஆன்லைன் விளையாட்டை வழங்குபவர்களை ஆணையம் கண்காணிக்கும். அவர்களைப் பற்றிய தரவுகளை பராமரிக்கும்.
• அவசரச் சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற, தேவைப்பட்டால் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ஐ பயன்படுத்தவும் அரசை ஆணையம் கேட்டுக்கொள்ளும். ஆன்லைன் விளையாட்டை அளிப்பவர்கள் மீதான புகாரை தீர்த்து வைக்கும்.
• அதோடு, விளையாட்டின் நேரம், அதில் செலுத்தப்படும் பணத்தின் அளவு, வயது கட்டுப்பாடு, போன்றவற்றை ஆணையம் ஒழுங்குபடுத்தும். ஆன்லைன் விளையாட்டை வழங்குபவர்களுக்கு எந்தவொரு உத்தரவையும் ஆணையம் வழங்க முடியும்.
• சிவில் கோர்ட்டுக்கு உள்ள அதிகாரம் போல (சம்மன் அனுப்புவது, சாட்சி பதிவு செய்வது, ஆவணங்களை கேட்டு வாங்குவது) ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
எத்தகைய ஆன்லைன் விளையாட்டு தடை?
• இந்த சட்ட மசோதா மூலம் அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளும் தடை செய்யப்படுகிறது. மேலும், பணம் (அல்லது வெகுமதிகள்) வெல்லக்கூடிய வாய்ப்புள்ள விளையாட்டாக கருத்தப்படும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளும் (ரம்மி, போக்கர்) தடை செய்யப்படுகின்றன.
• எந்தவொரு ஆன்லைன் விளையாட்டை வழங்குபவரும், சூதாட்டத்தை புகுத்தக் கூடாது. அந்த விளையாட்டை விளையாட எவரையும் அனுமதிக்கக் கூடாது. பணம் தொடர்புடைய ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது.
• ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பரிமாறப்படும் பணத்தை எந்தவொரு வங்கியும் பரிமாற்றம் செய்யக் கூடாது. எந்தவொரு ஆன்லைன் விளையாட்டு அளிப்பவர்களுக்கான பதிவுச் சான்று 3 ஆண்டுகளுக்கு செல்லும். ஒழுங்குமுறைகளை மீறினால், விளக்கம் கேட்டு அந்தப் பதிவு ரத்து செய்யப்படும்.
• இதற்கு 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். இதற்கான மேல்முறையீட்டு குழுவை, ஒரு தலைவர் (ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி) மற்றும் 2 உறுப்பினர்களைக் கொண்டு அரசு அமைக்கும்.
• உள்ளூரில் இல்லாத ஆன்லைன் விளையாட்டு வழங்குபவர் எவரும், எந்தவொரு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையோ, பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள விளையாட்டாக கருத்தப்படும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளையோ, ஒழுங்குமுறைக்கு மாறான விளையாட்டுகளையோ வழங்கக் கூடாது. அப்படி வழங்கினால், அந்த விளையாட்டு வழங்குபவரை தடை செய்வதற்கு மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக் கொள்ள வேண்டும்.
தண்டனைகள்:
• ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.
• இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்தால், ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும்.
• ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளிப்போருக்கு, 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
• இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் தவறு செய்தால், ஒரு ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
• ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளித்தவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு மீண்டும் தவறிழைத்தால், அந்த தண்டனை 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையாகவும், அபராதம் ரூ.20 லட்சமாகவும் நீட்டிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.