தமிழ்நாடு கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி மற்றும் அசாமி ஆகிய மாநிலங்களுக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறலாம் என எதிர்பார்க்கபடும் நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாதம் வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
முன்னாதாக, தமிழ்நாட்டில் நடந்து முடிந்த எஸ்.ஐ.ஆர் பணிகளின் படி, இறுதி வாக்காளர் பட்டியல் இம்மாதம் 17 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதற்கான இறுகட்ட தயாரிப்புகளை ஆய்வு செய்ய இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழு பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சென்னை வரவுள்ளது. அப்போது, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் தமிழகப் பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் ஆகியோருடன் தேர்தல் பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளனர்.
தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், அதன் பிறகு அந்தக் குழு செய்தியாளர்களை சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, தேர்தல் நடைபெறவுள்ள கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் இந்தக் குழு சென்று ஆய்வு செய்யவுள்ளது. இதற்கிடையில், தமிழக தேர்தல் தேதி குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத மத்தியில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.