தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு ஆந்திர கடல் பகுதியிலிருந்து குமரி கடல் பகுதி வரை உள் தமிழகம் வழியாக மண்டல கீழ் அடுக்கில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடித்து வருகிறது.
அதேநேரம், வளிமண்டல மைய பகுதியில் வட தமிழகத்தில் இருந்து லட்சத்தீவுகள் வரை கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி ஒன்று நிலவுகிறது. இதன் காரணமாக வரும் நாட்களில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையை பொருத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது