தமிழ்நாடு

விரைவுச் செய்திகள்: துவங்கும் 18+ தடுப்பூசி | கிராமங்களில் கொரோனா அதிகரிப்பு

விரைவுச் செய்திகள்: துவங்கும் 18+ தடுப்பூசி | கிராமங்களில் கொரோனா அதிகரிப்பு

Sinekadhara

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக முன்பதிவு செய்த 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவது தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்திற்கு மேலும் ஒரு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன. இதனையடுத்து, நாளை 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும் நிலையில் கூடுதல் தடுப்பூசிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை திருப்பூரில் நாளை தொடங்கி வைக்கிறார், முதல்வர் மு.க ஸ்டாலின்.

  • அரசு மரியாதையுடன் கி.ரா. உடல் தகனம்: கரிசல் இலக்கிய தந்தை கி.ரா. உடலுக்கு அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்பு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. தமிழகத்தில் எழுத்தாளருக்கு அரசு மரியாதை செலுத்துவது இதுவே முதன்முறையாகும்.
  • கெஜ்ரிவாலுக்கு சிங்கப்பூர் கண்டனம்: சிங்கப்பூரில் குழந்தைகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவதால் விமான சேவையை நிறுத்தவேண்டும் என கோரிக்கை வைத்ததுடன்,‘சிங்கப்பூர் வகை கொரோனா’ என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியதற்கு அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் புதிதாக எந்தவகை கொரோனாவும் சிங்கப்பூரில் பரவவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.
  • முதல்வர் வேண்டுகோள்: ஆக்சிஜன் உற்பத்திக் கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அதிகளவில் தயாரிக்க தொழில்துறையினர் முன்வர வேண்டும் என தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  • ஈபிஎஸ் கோரிக்கை: அனைத்து தொழிலாளர்களுக்கும் கொரோனா நிவாரணமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
  • கொரோனா உயிரிழப்பு: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் 4,529 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் கடந்த 24 மணி நேரத்தில் 3,89, 851 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்.
  • தடுப்பூசி தயாரிப்பு குறித்து கட்கரி: தடுப்பூசி தயாரிப்புக்கான அனுமதியை மேலும் 10 நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு, சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி யோசனை வழங்கியுள்ளார்.
  • விஜயகாந்த் டிஸ்சார்ஜ் குறித்து தேமுதிக: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வதந்திகள் பரவிய நிலையில், வழக்கமான பரிசோதனைக்கு பின் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தேமுதிக விளக்கம் அளித்துள்ளது.
  • ஸ்டெர்லைட்டில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி: ஸ்டெர்லைட் ஆலையில் இன்று முதல் மீண்டும் ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியுள்ளது. ஆலை பயன்பாட்டுக்கு வந்த ஓரிரு நாட்களில் பழுதானதால் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது பழுது சீரமைக்கப்பட்ட நிலையில் உற்பத்திப்பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
  • கமல்மீது முருகானந்தம் குற்றச்சாட்டு: மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் முருகானந்தம் விலகியுள்ளார். ஏற்கெனவே மகேந்திரன், சந்தோஷ் பாபு உள்ளிட்ட பல முக்கிய கட்சி உறுப்பினர்கள் விலகிய நிலையில், கமல்ஹாசனின் சர்வாதிகாரப் போக்கே தேர்தல் தோல்விக்கு காரணம் என முருகானந்தம் குற்றம் சாட்டியுள்ளார்.
  • முதலமைச்சர் நாளை ஆய்வு: கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். அதனைத் தொடர்ந்து சேலம், ஈரோடு மாவட்ட ஆட்சியர்களிடமும் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து நேரில் கேட்டறியவுள்ளார்.
  • கிராமப்புறங்களில் அதிகரிக்கும் கொரோனா: இந்தியாவில் 13 மாநிலங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  13 மாநிலங்களில் நகர்ப்புறங்களைக் காட்டிலுல் கிராமங்களில்தான் அதிகத் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் அறிகுறிகள் உள்ளவர்கள் மட்டுமே பரிசோதனைக்கு வரும் நிலையில், எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும் என கணிக்கப்படுகிறது. தமிழகத்தில் இது கடந்த ஒரு வாரத்தில் அதிகரித்துள்ளது.
  • கோயில் சொத்து விவரம்: கோயில்களின் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.
  • திடீரென உள்வாங்கிய கடல்: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் திடீரென 200 மீட்டர் கடல் உள்வாங்கியது. இதனால் படகுகள் தரைதட்டியதால் மீனவர்கள் தவிப்பில் உள்ளனர்.
  • வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம்: வங்கக்கடலில் வரும் 22ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
  • கடலில் மூழ்கிய கப்பல்: மும்பை அருகே கப்பல் மூழ்கிய விபத்தில் 14 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 70க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
  • ஆதரவற்ற குழந்தைகளுக்கு அரசு நடவடிக்கைகள்: கொரோனாவால் பெற்றோர்கள் உயிரிழப்பதால் ஆதரவற்று தவிக்கும் குழந்தைகளை பராமரிக்க மாநில அரசுகள் ஆதரவுக்கரம் நீட்டிவருகின்றன. மகாராஷ்டிரா, டெல்லி, மத்தியபிரதேசத்தில் பாதிப்பு விகிதம் அதிகரித்து வருவதையடுத்து, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது. மேலும், மாதம் ரூ.5000 மற்றும் இலவச ரேஷன் வழங்கவும் மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் சத்தீஸ்கரிலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் இலவசக் கல்வியுடன், தேவையான உதவிகள் செய்யப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.