தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு முடிவுகட்டும் வகையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணி, சசிகலா தலைமையில் மற்றொரு அணி என அதிமுக இரு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது. தமிழக முதல்வராக பொறுப்பேற்க உரிமை கோரிய அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, சிறை தண்டனைக்கு ஆளாகி விட்ட நிலையில், அவர் முதல்வர் போட்டியிலிருந்து வெளியேறியிருக்கிறார். அதனால் அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, தற்போது ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். அதேநேரத்தில் கடந்த 9ம் தேதி ஆளுநரிடம் அளித்த மனுவில், காபந்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், அதை நிரூபிக்க சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டுமென்றும் கோரியிருந்தார்.
இந்தநிலையில் அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் என இருதரப்பினருமே நேற்றிரவு ஆளுநரை மீண்டும் சந்தித்து பேசினர். இதில், எடப்பாடி பழனிச்சாமி தனக்கு ஆதரவான எம்எல்ஏக்கள் கடிதத்தினை அளித்தார். சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 124 எம்எல்ஏக்களின் ஆதரவு தங்களது அணிக்கு இருப்பதாகவும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு 8 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே இருப்பதாகத் தெரிவித்தார். இந்தசூழலில் தமிழக அரசியல் குழப்பத்துக்கு முடிவுகாணும் வகையில், ஆளுநர் இன்று முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.