தமிழ்நாடு

சுஜித்தை மீட்க 80 மணிநேரம் தூக்கம் மறந்து போராடிய மீட்பு குழுவினர்..!

webteam

குழந்தை சுஜித்தை மீட்க வேண்டும் என்பதற்காக 80 மணி நேரத்திற்கு மேலாக தூக்கம் மறந்து, உணவைத் துறந்து ஏராளமானோர் பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு மற்றும் மீட்புப்படையைச் சேர்ந்த 150 வீரர்கள் 4 நாட்களாக குழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் கண் துஞ்சாமல் பணியாற்றினர். இவர்கள் மட்டுமின்றி, தேசிய பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த 38 பேரும், மாநில பேரிடர் மீட்புப்படை வீரர்கள் 21 பேரும் களத்திலிருந்தனர். என்.எல்.சியைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழுவும், எல்அண்ட்டியைச் சேர்ந்த 10 ‌பேர் கொண்ட குழுவும் ஓ.என்.ஜி.சியைச் சேர்ந்த 4 பேரும் ஆழ்துளை கிணற்றுக்கு அருகே மற்றொரு குழி தோண்டி குழந்தையை மீட்கும் திட்டத்தை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

இவர்கள் மட்டுமின்றி திருச்சி என்.ஐ.டி.யைச் சேர்ந்த 3 பேர் கொண்ட குழு, குழந்தையை மீட்பதற்கான ஒவ்வொரு திட்டத்திற்கும் தங்கள் ஆலோசனைகளை வழங்கி வந்தனர். ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகே மற்றொரு குழி தோண்டும் பணியில் அதிசக்தி வாய்ந்த 2 ரிக் இயந்திரங்களும், பாறைகளை உடைக்க ஒரு ஆழ்துளைக் கிணறு தோண்டும் இயந்திரமும் பயன்படுத்தப்பட்டன.