சமஸ்கிருதத்தை விட தமிழ்மொழி தொன்மையானது என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம் என தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
12ஆம் வகுப்பிற்கான பாடப்புத்தகத்தில், தமிழ் கி.மு. 300ஆம் ஆண்டில் உருவானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் பிற தொன்மை மொழிகளான சீன மொழி கி.மு. 1250ஆம் ஆண்டிலும், கிரேக்கம் கி.மு. 1500ஆம் ஆண்டிலும், சமஸ்கிருதம் கி.மு. 2000 ஆம் ஆண்டிலும் உருவானதாகக் கூறப்பட்டுள்ளது. தமிழ்மொழி 5000 ஆண்டுகள் பழமை ஆனது என அறிஞர்கள் கூறிவரும் நிலையில், தற்போது 2300 ஆண்டுகள்தான் பழமையானது எனக் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய அமைச்சர் கே.பாண்டியராஜன், “சமஸ்கிருத மொழியை விட தமிழ் மொழி தொன்மையானது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பாடப்புத்தகத்தில் தமிழ் மொழியின் வரலாறு குறித்து தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. தவறை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை விரைந்து எடுக்கும்.
3.75 லட்சம் ஆண்டுகள் முன்பு தமிழர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழ் மொழியை தமிழக அரசு ஒருபோதும் இழிவாக எண்ணியது கிடையாது” என்று குறிப்பிட்டுள்ளார்.