தமிழ்நாடு

“தமிழ்மொழி கிமு 300 ஆண்டுகள்தான் பழமையானதா?” - வெடிக்கும் புதிய சர்ச்சை

“தமிழ்மொழி கிமு 300 ஆண்டுகள்தான் பழமையானதா?” - வெடிக்கும் புதிய சர்ச்சை

rajakannan

12ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத்தில், தமிழ் மொழி கிமு 300 ஆண்டுகள் பழமையானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது இப்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

12ஆம் வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம் இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய பாடத்திட்ட புத்தகத்தில், தொன்மையான மொழியான தமிழின் நிலை என்ற பாடம் இடம்பெற்றுள்ளது. கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியரான ஜார்ஜ் எல். ஹார்ட் என்பவர் எழுதிய இந்தப் பாடத்தில் தொன்மையான மொழிகள் உருவான ஆண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

அதில், தமிழ் கி.மு. 300ஆம் ஆண்டில் உருவானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் பிற தொன்மை மொழிகளான சீன மொழி கி.மு. 1250ஆம் ஆண்டிலும், கிரேக்கம் கி.மு. 1500ஆம் ஆண்டிலும், சமஸ்கிருதம் கி.மு. 2000 ஆம் ஆண்டிலும் உருவானதாகக் கூறப்பட்டுள்ளது. 

மேலும், தமிழின் தொன்மையான இலக்கியமான தொல்காப்பியம் 2 ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையானது எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழ் மொழி 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது எனப் தமிழ் ஆர்வலர்களால் கூறப்பட்டு வரும் நிலையில், 2 ஆயிரத்து 300 ஆண்டுகள்தான் பழமையானது என புதிய பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.