தமிழ்நாடு

குடியரசுத்தலைவர் விருதில் தமிழ் புறக்கணிப்பு என்பது பொய் - தமிழ் வளர்ச்சித்துறை

webteam

குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தமிழ் வளர்ச்சித்துறை கூறியுள்ளது.

மத்திய அரசின் சார்பில் செம்மொழிக்கு வழங்கப்படும் குடியரசுத் தலைவர் விருது அறிவிப்பில் தமிழ் புறக்கணிப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதுதொடர்பாக செய்திகளும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ் மொழிக்கு மட்டுமே 2004ஆம் ஆண்டில் செம்மொழி தகுதி வழங்கப்பெற்றது. இதைத்தொடர்ந்து தமிழ் மொழிக்கு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 2008ஆம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் மூலம் மத்திய அரசின் தொல்காப்பியர் விருது, குறள் பீட விருது, இளம் அறிஞர் விருது ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. 

2013-14, 2014-15, 2015-16 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு சேர்த்து 2017ஆம் ஆண்டு குடியரசுத்தலைவரால் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 2016-17ஆம் ஆண்டு விருதுகளுக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. விருதாளர்களை தேர்ந்தெடுக்க செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை’ இவ்வாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.