தமிழ்நாடு

தங்க மகள் கோமதிக்கு ரூ.1 லட்சம் வழங்குவது எனக்கு பெருமை - நடிகர் ரோபோ சங்கர்

webteam

தங்க மகள் கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்குவதை பெருமையாக நினைத்துக் கொள்வதாக நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.

23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. இதில்  பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் 800 மீட்டர் தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதன்மூலம் இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கத்தை கோமதி மாரிமுத்து பெற்றுத்தந்தார். தங்க மகள் கோமதிக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் தங்க மகள் கோமதி மாரிமுத்துவுக்கு ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார். இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள ரோபோ சங்கர், ''தங்கம் பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்து அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நானும் கஷ்டங்களை அனுபவித்து இந்த நிலைமைக்கு வந்தவன் தான். அதன் கஷ்டம் எனக்கும் தெரியும். கோமதி அவர்களுக்கு என்னுடைய சிறிய அன்பு பரிசாக ரூ.1 லட்சம் கொடுப்பதை பெருமையாக நினைத்துக்கொள்கிறேன். மேலும் இவருடைய வெற்றி பல பெண்களுக்கும் உத்வேகம் அளிக்கும்'' எனவும் ரோபோ சங்கர் கூறியுள்ளார். 

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்கள் இருவரின் குடும்பத்திற்கும் ரோபோ சங்கர் தலா ஒரு லட்சம் வழங்கியது குறிப்பிடத்தக்கது