தாம்பரம் ரயில் நிலையத்தின் நடை மேம்பாலங்களை பயன்படுத்துவதற்கு நாள்தோறும் மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுகின்றனர்.
சென்னை புறநகர் பகுதியின் முக்கிய சந்திப்பாக திகழ்கிறது தாம்பரம் ரயில் சந்திப்பு. தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு செல்வதற்கும், சென்னை மாநகர பகுதிக்குள் செல்வதற்கும் தாம்பரம் ரயில் நிலையத்தை பொது மக்கள் பிரதானமாக பயன்படுத்துகின்றனர். நாள் தோறும் 200-க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையம் வழியே கடந்து செல்கிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 3.5 லட்சம் மக்கள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.
தாம்பரம் ரயில் நிலையம் ஜி.எஸ்.டி சாலைக்கு அருகே அமைந்துள்ளதால், மேற்கு தாம்பரம் மற்றும் கிழக்கு தாம்பரம் வழியே ரயில் நிலையத்திற்குள் செல்ல வேண்டுமென்றால் நடை மேம்பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டும். 8 நடைமேடைகளை கொண்ட பரபரப்பான ரயில் நிலையம் என்பதால் நடை மேம்பாலத்தின் உயரம் மற்றும் நீளம் அதிகமாக உள்ளது.
இதனால் தாம்பரம் ரயில் நிலையம் வழியே கடந்து செல்லும் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கடும் பாதிப்பை சந்திக்கின்றனர். தினமும் படிக்கட்டுகளில் ஏறுவதற்கு உதவிக்கு ஒருவர் இருந்தால் தான் நடைமேடைகளில் எற முடியும் என்கிற நிலை அவர்களுக்கு உள்ளது.
பொது மக்கள் பயன்படுத்துவதற்கு தானியங்கி படிக்கட்டுகள் இருந்தும், அதை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் ரயில் ஏறி செல்வதற்கு பிரத்யேகமான பாதைகள் அல்லது லிப்ட்கள் அமைக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
- பால வெற்றிவேல்