தமிழ்நாடு

10 அடி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசு மாடு - போராடி மீட்பு

webteam

புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தின் கழிவுநீர் தொட்டியில் தவறிவிழுந்த பசு மாட்டினை ஒரு மணி நேரம் போராடி உயிருடன் மீட்ட தாம்பரம் தீயணைப்பு துறையினரை மொதுமக்கள் பாராட்டினர்.

சென்னை தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் கிருஷ்ணா நகர் பகுதியில் ஜெகநாதன் என்பவரின் வீடு ஒன்று புதிதாக கட்டப்பட்டு வரும் நிலையில் அதன் வாயில் அருகே 10 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டி கட்டப்பட்டு மூடப்படாமல் இருந்துள்ளது. அப்பகுதியில் சென்ற பசுமாடு ஒன்று அந்தப் பள்ளத்தில் தவறி விழுந்தது. நீண்ட நேரம் மாடு கத்தியதால் அக்கம்பக்கத்தினர் தொட்டியின் உள்ளே பார்த்தபோது பசுமாடு ஒன்று விழுந்து கிடந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் துரிதமாக சென்ற தீயணைப்பு வீரர்கள் கழிவுநீர் தொட்டியின் உள்ளே, மாட்டினை கயிறு மூலம் கட்டி மேலே இழுக்க பார்த்தனர். ஆனால் மாடு மிரண்டு போய் தீயணைப்பு துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

இதனால் தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீரை கழிவுநீர் தொட்டியில் நிரப்பினர். இதன்பின், கயிறு மூலம் கட்டப்பட்டு பின்னர் மேலே இழுத்து, பின் வெளியே எடுத்து காப்பாற்றினர். வெளியே வந்த மாடு நல்லமுறையில் நடந்து சென்றது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.