இன்று நடைபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்துவது என்றும், அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
ஊதிய உயர்வு அளிக்க வேண்டும், நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிலாளர்கள் வரும் 24ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.
இதையடுத்து, சென்னை தேனாம்பேட்டையில் தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் யாஷின் பேகம் தலைமையில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. அரசுத் தரப்பில் 8 போக்குவரத்துத் தொழிலாளர்களின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் 12 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில், தீர்வு கிடைக்காததால் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது என முடிவு எடுக்கப்பட்டது. இதை தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொண்டன.