ஒரு முறைக்கு மேல் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள போலி வாக்காளர்கள் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை நீக்க வேண்டும் என்று திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் போலி வாக்காளர்கள் 46 ஆயிரம் பெயரை நீக்கவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்ததால் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
இதனையடுத்து, இன்னும் 5,117 போலி வாக்காளர்கள் உள்ளனர் என்றும் அவர்களை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி திமுக சார்பில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் சிவஞானம் மற்றும் ரவிசந்திர பாபு ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.
தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன், “5 ஆயிரத்து 117 போலி வாக்காளர்கள் இருப்பதாக மனுதாரர் கூறுவது தவறு. வாக்காளர் பட்டியலை சரி பார்த்தபோது 1947 இரட்டை பதிவு வாக்காளர்கள் பெயர் இருந்தன. தற்போது தேர்தல் நடவடிக்கை தொடங்கி விட்டதால், வாக்காளர்கள் பட்டியலை சரி செய்ய முடியாது” என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, போலி வாக்காளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி வாக்காளர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களுக்கு அனுப்பி, அவர்கள் வாக்காளிக்காமலும், தேர்தலில் போட்டியிட முடியாமலும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. ஒரு முறைக்கு மேல் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விசாரணையின் போது, தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை என்றும் ஆளுக்கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுகிறது என்றும் திமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இருப்பினும் தாங்கள் எந்த கட்சிகளையும் சாராதவர்கள் என்றும் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தனி அமைப்பின் கீழ் செயல்படுபவர்கள் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, போலி வாக்காளர்களை நீக்கக் கோரி திமுக தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. போலி வாக்காளர்களை நீக்க, திமுக தொடர்ந்த முயற்சிக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது.