தமிழ்நாடு

T23 புலியை பிடிக்கத் திணறும் வனத்துறை - 20 நாட்களாக போக்கு காட்டும் புலி

T23 புலியை பிடிக்கத் திணறும் வனத்துறை - 20 நாட்களாக போக்கு காட்டும் புலி

Sinekadhara

கூடலூரில் T23 புலியை பிடிக்க வனத்துறை திணறிவரும் நிலையில், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழக வனத்துறை மனித - விலங்கு மோதல்களை கையாள்வதில் சற்று பின்னால் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதிகளில் மனிதர்கள் நான்கு பேரையும், 50க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்ற T23 புலியை உயிருடன் பிடிக்க முடியாமல் தமிழக வனத்துறை திணறி வருகிறது. இந்நிலையில் புலியை பிடிப்பதற்கான வனத்துறையின் தற்போது வரையிலான உத்திகள் தவறானவை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. T23 புலி வனத்துறை குழுக்களைக் கண்டாலே அஞ்சி பதுங்கிக்கொள்கிறது. ஆனால் வனத்துறையினரோ புலி பதுங்கி இருக்கக்கூடிய பகுதிக்கு கூட்டமாக சென்று அதனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

புலியைக் கண்டறிய வனப்பகுதிக்கு செல்லும் குழு காலை 6 மணி அளவில் உள்ளே சென்று, புலி இருக்கும் இடத்தை உறுதிசெய்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கிறது. அந்த தகவல் கிடைத்த பின்னரே வெளியிலிருக்கும் வன கால்நடை மருத்துவர்கள் புலி இருக்கும் பகுதிக்குச் செல்கிறார்கள். இதனால் இரண்டுமுறை புலி வனத்துறையினரின் கண்ணில் தென்பட்டும் வன கால்நடை மருத்துவர்கள் அங்கு செல்ல தாமதமானதால் தப்பிச் சென்றது.

இதுபோன்ற சூழல் கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் வனத்துறையினரால் தொடர்ந்து எதிர்கொள்ளப்படுகிறது. கேரள அரசு வயநாடு மாவட்டத்தில் புலி - மனித மோதல்களை தடுப்பதற்காக சிறப்பு குழு ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இதேபோல கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை ஒட்டிய பகுதிகளில் ஏற்படும் புலி - மனித மோதல்களை பெரிய அளவில் தொழில்நுட்பங்கள் இல்லாவிட்டாலும் அவற்றை சிறப்பாக கையாண்டு வருகிறது அந்த மாநில வனத்துறை.

ஆனால் தமிழக வனத்துறையோ, நீலகிரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக புலி - மனித மோதல்கள் அதிகரித்து வரும் சூழலில், அதனை கட்டுப்படுத்த தங்களை தயார்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறது. குறிப்பாக புலிக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு ஓசூர், தேனி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வன கால்நடை மருத்துவர்களை அழைத்து வரவேண்டிய நிலையில் தற்போதும் உள்ளது. எனவே, தமிழக வனத்துறை புலி - மனித மோதல்களை தடுக்க முழு வீச்சில் தயாராக வேண்டியது அவசியம் என வன உயிரின ஆர்வலர்கள் கூறுகின்றனர்.