பாஜகவுக்கு ஒரு நீதி? திமுகவுக்கு ஒரு நீதியா? என திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “மற்ற கட்சியினரை கைது செய்தால் மாலையே விட்டு விடுகின்றனர். ஆனால் உதயநிதியை நீண்ட நேரம் காக்கவைத்துள்ளனர். பாஜகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா? கைது, சிறை, சித்ரவதை என அனைத்தையும் பார்த்தவர்கள்தான் திமுகவினர். அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் மிசா சிறையில் ஓராண்டு காலம் இருந்தது மட்டுமில்லாமல் அடி, உதை பட்டு, ரத்தம் சொட்ட சொட்ட சிறையில் இருந்தவர்.
கருணாநிதி, மாறன் உள்ளிட்டோர் படாத கொடுமைகள் இல்லை. எல்லாரும் சிறைவாசம் கண்டவர்கள்தான். அவர்களின் குடும்பத்தை சேர்ந்த பிள்ளை, உதயநிதி எந்த தியாகத்தை செய்வதற்கும் அவர் தயாராகத்தான் இருக்கிறார். ஆனால் இத்தகைய கொடுமைகளை பார்த்துக்கொண்டு இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. இந்த கொடுமைகளை தட்டிக்கேட்க வேண்டும். அராஜக ஆட்சி நடக்கிறது. பாஜக முறைப்படி சட்ட ஒழுங்கை காப்பாற்றிருக்க வேண்டும். அதை அவர்கள் செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டினோம்.
அமித்ஷா வரும்போதும் போகும்போதும் இடைவெளி சரியாக இருந்ததா? பழனிசாமி போகும் இடத்திலெல்லாம் கூட்டம். இடைவெளி இருந்ததா? சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான். அந்த சட்டத்தை எங்களுக்கு வழங்க தயாராக இல்லை” எனத் தெரிவித்தார்.