சென்னை தியாகராய நகரில் நகைக் கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தியாகராய நகரிலுள்ள பிரபல நகைக் கடையில், தான் வாங்கிய 3 சவரன் தங்கச் சங்கிலி போலி என்றும், மாவு தடவி விற்கப்பட்டதாகவும் தனசேகர் என்பவர் கடை உரிமையாளரை மிரட்டியுள்ளார். மேலும், போலி நகைகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் பரப்பி விடுவேன் என்று மிரட்டி 15 லட்சம் ரூபாய் பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், 10 நாட்களுக்குப் பிறகு நேற்று 15 பேருடன் மீண்டும் கடைக்கு வந்த தனசேகர், ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். முன்னதாக கடை உரிமையாளர் அளித்திருந்த தகவலின்பேரில் அங்கு வந்திருந்த காவல் துறையினர் அவர்களைப் பிடிக்க முயன்றபோது 5 பேர் தப்பியோடினர். பிடிபட்ட தனசேகர், ஜீவா, அபுதாஹீர், ஜகதீசன், ஸ்ரீராம் உள்ளிட்ட 10 பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அவர்களிடமிருந்து போலியான காவலர் அடையாள அட்டை, போலி பத்திரிகையாளர் அடையாள அட்டைகள், இரண்டு துப்பாக்கிகள், இரண்டு கார்கள், கத்தி, ஒரு லட்சத்து பத்து ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.