தமிழ்நாடு

எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக விசாரணை நடத்தப்படும் - தா.மோ.அன்பரசன் பேட்டி

Sinekadhara

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு தரமற்ற முறையில் கட்டப்பட்ட விவகாரத்தில், புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ பரந்தாமன் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்திருக்கின்றனர். 

புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் 4 பகுதிகளாக 1,920 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதில் அண்மையில் மக்கள் குடியேறிய ஒரு கட்டடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டது புதிய தலைமுறையின் கள ஆய்வில் அம்பலமானது. இதையடுத்து, குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தபின், கடந்த 4 நாட்களாக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய தலைமுறையில் தொடர்ந்து செய்தி ஒளிபரப்பான நிலையில் இவ்விவகாரம் குறித்து எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் குடிசைமாற்று வாரிய உதவிப் பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாகப் பொறியாளர் அன்பழகன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்கு ஆளான தனியார் நிறுவனம் பன்னடுக்கு குடியிருப்பை கட்டி முடிக்கும் வரை, இவ்விருவரும் கண்காணிப்பு பொறுப்பில் இருந்துள்ளனர். கட்டுமானப் பணிகளை கண்காணிக்காததாலும், அதுகுறித்து குடிசை மாற்று வாரிய இயக்குநருக்கு முறையாக அறிக்கை அனுப்பாததாலும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ’’தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் முதலமைச்சர் ஸ்டாலினின் நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது. எவ்வளவு விரைவாக விசாரணை நடத்தமுடியுமோ அவ்வளவு விரைவாக விசாரணை நடத்தபப்படும். ஒப்பந்ததாரர் தவறு செய்திருந்தால் அவர் முடக்கப்பட்டோரின் பட்டியலில் சேர்க்கப்படுவார்’’ என்று எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ பரந்தாமன் கூறியபோது, ’’ சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மனம் கொண்டு வந்த பிறகு அமைச்சர் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன் தொடர் நடவடிக்கையாகத்தான் தற்போது உதவிப் பொறியாளர் பாண்டியன் மற்றும் உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். முழுமையான அனுமதி வழங்கப்படாததற்கு முன்பே மக்கள் அங்கு குடியேறிவிட்டதால் விசாரணை மற்றும் ஆய்வுக்கு அங்கு வசித்துவரும் மக்களும் அரசுக்கு ஒத்துழைப்புத் தரவேண்டும்’’ என்று கூறினார்.