மறைந்த கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்த தி.க பொதுச்செயலாளர் கி.விரமணி கூறியதாவது:
ஈரோட்டு குருகுலத்தில் விளைந்த நல்ல கொள்கை விளைச்சல் கருணாநிதி. எந்த கொள்கையில் அவர்கள் தொடங்கினார்களோ அந்த கொள்கையை காப்பாற்றுவதற்கான ஒரு வாய்ப்பு ஆட்சி என்று அவர் கருதினாரே ஒழிய, ஆட்சியை அவர் ஒருபோதும் காட்சியாக ஆக்கிக்கொண்டவர் அல்ல. வாழ்வு முழுவதும் எதிர்நீச்சல் அடித்தவர் கலைஞர். வாழ்ந்தபோதுதான் எதிர்நீச்சல் அடித்தார் என்று சொன்னால் கூட, அவர் மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களிலேயே நிறைந்திருக்கிற இந்த காலக்கட்டத்தில் கூட, அவர் அடக்கம் செய்யப்படுவதிலே கூட எதிர்நீச்சல் அடித்துக்கொண்டுதான் இருக்கிறார் என்று நினைக்கும்போது, அவர் எப்போதுமே மறையாதவர் என்பதற்கான அடையாளமாக இதை பார்க்கிறேன். திராவிட இயக்கத்தின் காவல் அரணான அவர், தன் பணிகளை நெருக்கடி காலத்திலும் சிறப்பாக செயல்பட்டு இந்தக் கொள்கையை இமயத்துக்குக் கொண்டு சென்றவர்.