Swiggy employees
Swiggy employees PT Desk
தமிழ்நாடு

”115 டிகிரி வெயில்.. நெருப்புல போற மாதிரி போறோம்” - ஸ்விக்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

PT WEB

அனைத்து ஊழியர்களுக்கும் பழைய ஊதிய முறையை திரும்ப அமல்படுத்த வேண்டும், புதிய ஊதிய முறையை திரும்ப பெற வேண்டும், ஏற்கெனவே வழங்கி வந்த TURN OVER ஊக்கத் தொகையை மீண்டும் வழங்கிட வேண்டும், ஒரு கிலோ மீட்டருக்கு பத்து ரூபாய் வழங்கிட வேண்டும், ஒரு ஆர்டருக்கு மினிமம் 30 ரூபாய் வழங்கிட வேண்டும், காத்திருப்பு கட்டணத்தை ஆர்டர் தொகையுடன் இணைக்காமல் தனியாக வழங்க வேண்டும், வாடிக்கையாளர் சேவை மையத்தில் பேசும் போது இந்தி தவிர்த்து தமிழிலும் பேச வேண்டும், முறையான காரணம் இல்லாமல் அபராதம் விதிக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஸ்விக்கி ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட கோரி தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கம் சார்பில் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்விக்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களுக்கு முறையான பணி பாதுகாப்பு, முறையான ஊதியம் வழங்கப்படுவது இல்லை, கொரோனா காலகட்டத்திலும் உயிரை பணயம் வைத்து பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினோம், தொடர்ந்து மழை, வெயில் என பாராமல் பணியில் ஈடுபட்டு வரும் தங்களுக்கு முறையான அங்கீகாரம் கிடைப்பது இல்லை; ஆகவே தங்களை ஸ்விக்கி நிர்வாகம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், அரசு இதில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும், இல்லை என்றால் தங்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்றும் கூறி வேலை நிறுத்தப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.