ஒப்புகைச் சீட்டு வழக்கு
ஒப்புகைச் சீட்டு வழக்கு முகநூல்
தமிழ்நாடு

ஒப்புகைச் சீட்டு வழக்கு... உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்வி!

PT WEB

மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சந்தேகங்களை எழுப்பி வருகின்றன.

இதற்கிடையே, தேர்தலில் பதிவாகும் 100 சதவீத வாக்குகளையும், ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க உத்தரவிடக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கில் சில சந்தேகங்கள் தங்களுக்கு உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இது குறித்து அவர்கள் கேள்வி எழுப்புகையில், “மைக்ரோ கன்ட்ரோலர் சாதனம், மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளதா அல்லது விவிபேட் இயந்திரத்தில் உள்ளதா? மைக்ரோ கன்ட்ரோலர் ஒருமுறை மட்டுமே ப்ரோகிராம் செய்யப்படக் கூடியதா?” என்று கேள்வி எழுப்பினர்.

முன்னதாக, “தேர்தல் நடவடிக்கைகள் என்பது மிகவும் புனிதமானதாக இருக்க வேண்டும். தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தஒரு சந்தேகமும் அச்சமும் இருக்கக் கூடாது” என்று நீதிபதிகள் கூறிய நிலையில்,

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் ஒப்புகை சீட்டு எந்திரங்கள் ஆகியவற்றில் முறைகேடு செய்ய முடியாது” என தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த சந்தேகங்களை தீர்க்க, பிற்பகல் 2 மணிக்கு தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.