விஜய், உச்ச நீதிமன்றம் pt web
தமிழ்நாடு

தவெக கரூர் துயரம்| சிபிஐ விசாரணை கோரிய வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி தவெக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

Rishan Vengai

கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி தவெக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நெஞ்சைவிட்டு அகலாத இந்த துயரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், தவெக தலைவர் விஜய் தாமதாக வந்ததே இத்துயரத்திற்கு முக்கிய காரணம் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. மேலும் தவெகவினர் மக்களை பார்க்காமல் ஓடிவிட்டனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

கரூர்

ஆனால் காவல்துறை அறிவுறுத்தலின்பேரில் மட்டுமே கரூர் நிர்வாகிகள் கரூரை விட்டு வெளியேறியதாகவும், இதுவரை பலகூட்டம் நடத்தியபோது எதுவும் நடக்கவில்லை, ஆனால் கரூரில் மட்டும் எப்படி நடந்தது? இதில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், தமிழக காவல்துறை அடங்கிய குழுவின் விசாரணை மேல் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், விசாரணையை சிபிஐக்கு மாற்றவேண்டும் எனக் கூறி தவெக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டது.

கடந்த 11-ம் தேதி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை இன்று தெரிவிப்பதாக கூறியிருந்தனர்.

இன்று தீர்ப்பு வழங்கும் உச்சநீதிமன்றம்..

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக் கோரி தவெக மட்டுமில்லாமல், உயிரிழந்தவர்களின் குடும்பத்திலிருந்தும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது.

சிபிஐ விசாரணைக் கோரிய 5 மனுக்களின் மீதான விசாரணை நீதிபதி ஜே. கே. மகேஸ்வரி , என்.வி. அஞ்சாரியா
தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தவெக தரப்பில், காவல் துறையின் அறிவுறுத்தலின்படியே நெரிசல் ஏற்பட்ட இடத்தில் இருந்து விஜய் வெளியேறினார் என வாதிடப்பட்டது. உயிரிழந்த சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் தரப்பில், பரப்புரையில் ரவுடிகள் நுழைந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. சிபிஐ போன்ற பொதுவான ஒரு அமைப்பு விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தமிழக அரசு தரப்பில் நெரிசல் சம்பவத்திற்கு விஜய் தாமதமாக வந்ததே காரணம் என்றும், அரிதான வழக்குகளுக்கு மட்டுமே சிபிஐ விசாரணைத் தேவை என்றும், உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவே போதும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ரவுடிகள் நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை மறுப்பு தெரிவிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் இரவில் நடத்தப்பட்ட உடற்கூராய்வில் எந்தத் தவறும் இல்லை என்று வாதம் வைக்கப்பட்டது.

நீதிபதிகள் ஜே. கே. மகேஸ்வரி , என்.வி. அஞ்சாரியா

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், உடற்கூராய்வுக்கு எத்தனை மேசைகள் இருந்தன, மருத்துவக் கட்டமைப்பு என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பியதுடன், தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும், மனுதாரர்கள் எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்ப்பிக்கவும் அனுமதி அளித்து தீர்ப்பை இன்று ஒத்திவைத்தனர். இந்தசூழலில் வழக்குமீதான தீர்ப்பு இன்று வரவிருக்கிறது.