பொன்முடி
பொன்முடி புதிய தலைமுறை
தமிழ்நாடு

அமைச்சராவாரா பொன்முடி? இன்று வழக்கு விசாரணை!

PT WEB

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் தண்டனை விதித்திருந்தது. அதன்படி பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பால், பொன்முடி தன் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவியை அடுத்தடுத்த தினங்களிலேயே இழந்தார்.

பொன்முடி

இந்நிலையில், அந்த சிறை தண்டனையை மார்ச் 11-ம் தேதி நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை அடுத்து, அவரை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்க முடிவெடுத்து, அது தொடர்பான பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பினார்.

அந்தப் பரிந்துரை மீது ஆளுநர் இதுவரையில் முடிவெடுக்காத நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்ற விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் பொன்முடி தொடர்பான இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள பட்டியலிடப்பட்டுள்ளது.