உச்ச நீதிமன்றம், ரன்வீர் அல்லபாடியா pt web
தமிழ்நாடு

மனதில் தோன்றுவதை பேசுவதா? யூடியூபருக்கு அல்லபாடியாவிற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

தான் ஒரு பிரபலம் என்பதற்காக மனதில் தோன்றுவதை எல்லாம் பேசுவதா? யூ ட்யூபர் ரன்வீர் அல்லாபாடியாவின் மனது மோசமான கருத்துகளால் நிறைந்துள்ளது என உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

PT WEB

மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரன்வீர் அல்லாபாடியா பேசிய கருத்துக்கள் சர்ச்சையான நிலையில், அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்ய காந்த், என். கோட்டீஸ்வர் சிங் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிகழ்ச்சியில் அல்லாபாடியா பேசிய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவர் பேசிய வார்த்தைகள், மகள்கள், சகோதரிகள், பெற்றோர் மற்றும் சமூகத்தை வெட்கமடைய வைத்துள்ளது என்று கூறிய நீதிபதி சூர்ய காந்த், இந்த வார்த்தைகள் அவரது மோசமான, வக்கிரம் நிறைந்த மனதை காட்டுவதாக தெரிவித்தார். நீதிமன்றம் ஏன் இவருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ரன்வீர் அல்லபாடியா

இத்தகைய வார்த்தைகளை பேசுவதன் மூலம் மலிவான விளம்பரத்தை பெற நினைத்தால், மற்றவர்களும் இதுபோன்று மலிவான விளம்பரம் தேட முனைவார்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். சமூகத்தின் விழுமியங்கள் என்ன? அதன் வரையறைகளாவது தெரியுமா? சமூகம் சுயமான விழுமியங்களை கொண்டது. பேச்சு சுதந்திரத்தின் பெயரால் சமூக விழுமியங்களை மதிக்க வேண்டும், சமூகத்துக்கு எதிரானவற்றை தங்கள் விருப்பம் போல பேச யாருக்கும் உரிமை கிடையாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அல்லாபாடியா மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைகள் மீது பதிலளிக்க காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், மகாராஷ்டிரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் ரன்வீர் அல்லாபாடியாவுக்கு எதிராக பதிவாகியுள்ள முதல் தகவல் அறிக்கைகள் தொடர்பான விசாரணைக்கு அவர் ஆஜராகும் பட்சத்தில், கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

உச்சநீதிமன்றம்

விசாரணைக்கு செல்லும் போது, காவல் நிலையத்திற்குள் வழக்கறிஞரை அழைத்துச் செல்ல தடை விதித்த நீதிபதிகள், தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ரன்வீர் அல்லாடியா நினைத்தால் மகாராஷ்டிரா மற்றும் அசாம் மாநில காவல்துறையிடம் பாதுகாப்பு கோரலாம் என்றும் உத்தரவில் தெரிவித்தனர். மனுதாரர் அல்லது அவரது கூட்டாளிகள் மறு உத்தரவு வரும் வரை வேறு எந்த நிகழ்ச்சியையும் ஒளிபரப்பக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், ஜெய்ப்பூரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதில் கைது செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரன்வீர் அல்லாபாடியா தனது பாஸ்போர்ட்டை, தானே காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், நாட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றால் உச்சநீதிமன்றத்தின் அனுமதி பெறவேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.