செந்தில் பாலாஜி File image
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி விவகாரம்: அமலாக்கத்துறை மேல்முறையீட்டுக்கு உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?

“செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றிய விவகாரத்தில், உயர் நீதிமன்றம் முதலில் முடிவெடுக்கட்டும்” எனக்கூறி அமலாக்கத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணையை ஒத்திவைத்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.

நிரஞ்சன் குமார்

போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பைபாஸ் சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியுடன் மாற்றப்பட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதியை தொடர்ந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றும், “அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு அதிகாரமிக்க அமைச்சர். ஆனால் அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது” என்றும் கூறி சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இன்றைய தினம் உச்சநீதிமன்ற கோடைகால விடுமுறை சிறப்பு அமர்வில் முறையிட்டார்.

அப்போது நீதிபதிகள், “இந்த விவகாரத்தை முதலில் உயர் நீதிமன்றம் விசாரிக்கட்டும். சென்னை உயர் நீதிமன்றம் விசாரிப்பதற்கு முன்பாக நாங்களாகவே எப்படி இந்த விவகாரத்தில் முடிவெடுக்க முடியும்?” என்றுகூறி அமலாக்கத்துறையினரின் கோரிக்கையை நிராகரித்தனர். மேலும் வழக்கின் விசாரணை ஜூன் 21ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து ஒத்திவைத்தனர்.

மருத்துவமனை மாறுவது என்பது, அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமையின் கீழ் வருவதால், இவ்விவகாரத்தில் இனி அமலாக்கத்துறையால் மேற்கொண்டு எதுவும் செய்ய இயலாது என சொல்லப்படுகிறது. இதுதொடர்பான முழு விவரங்களை, கீழுள்ள வீடியோவில் அறியலாம்: