திருப்பரங்குன்றம் மலை web
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் விவகாரம் - நாளை மீண்டும் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

கார்த்திகை தீபம் விவகாரம்: கோயில் நிர்வாக குழு இடைநீக்கம், முன்னாள் நீதிபதிகள் குழு நியமனம்

PT WEB

செய்தியாளர் - M.மீரா

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நாளை (நவம்பர் 28, 2026) கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கடந்த நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின்படி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை என்று கூறி தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த உத்தரவை வழங்கியுள்ளனர்.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கார்த்திகை தீபத்தன்று வழக்கமான இடமான உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டதாகவும், பாரம்பரிய தீபத்தூணில் தீபம் ஏற்ற அதிகாரிகள் தவறிவிட்டதாகவும் வாதிட்டனர். நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறியதாகக் கூறி, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், டிஜிபி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழு தலைவர் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருப்பரங்குன்றம்

மேலும் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ள நீதிமன்றம், கோயில் அறங்காவலர் குழுவை உடனடியாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. கோயிலின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்காக முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட குழுவை நியமித்துள்ளதாகவும், மலை உச்சியில் நாளை தீபம் ஏற்றும் போது உரிய பாதுகாப்பு வழங்குவதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (CRPF) ஈடுபடுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதிமன்ற உத்தரவின்படி நாளை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் தீவிரமாக முடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் தமிழகத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.