கரூர் சம்பவ வழக்கு மதுரைக்கிளை நீதிமன்றத்தில் இருக்கும்பொழுது சென்னை உயர்நீதிமன்ற தலையிட்டு புலனாய்வுக் குழு அமைத்ததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த துயரச் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு விசாரணைக் குழு தலைமையில் விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், அதனை எதிர்த்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று தவெக தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு மீது தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட புலனாய்வுக் குழுவையும் நியமித்துள்ளது.
கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக் கோரிய வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜே. கே. மகேஸ்வரி , என்.வி. அஞ்சாரியா
தலைமையிலான அமர்வு, கரூர் துயரச்சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. மேலும் சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான 3 பேர் கொண்ட புலனாய்வுக் குழுவையும் நியமித்தது. இந்தக் குழுவுக்கு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமை தாங்குவார் என்றும், அவருடன் இரண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகள் அந்தக் குழுவில் இடம்பெறுவார்கள் என்றும் தீர்ப்பளித்தது.
மேலும் சென்னை உயர்நீதிமன்றம் SIT அமைத்த உத்தரவிற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், மதுரை வரம்புக்குள் வருவதை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு எப்படி விசாரித்தது? அரசு ஆணையம் அமைத்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் எப்படி தன்னிச்சையாக உத்தரவிட முடியும்? என்ற கேள்விகளை எழுப்பி கண்டனம் தெரிவித்தது.