உதயநிதி ஸ்டாலின், உச்ச நீதிமன்றம்
உதயநிதி ஸ்டாலின், உச்ச நீதிமன்றம் கோப்புப் படம்
தமிழ்நாடு

சனாதனம் குறித்த பேச்சின் பின் விளைவுகள் தெரியாதா? - அமைச்சர் உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

webteam

செய்தியாளர் நிரஞ்சன் குமார்

கடந்த ஆண்டு தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சு பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு ஒரே வழக்காக மாற்றி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கூறி உதயநிதி ஸ்டாலின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

udhayanidhi stalin

மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீங்கள் ஒரு சாதாரண நபர் கிடையாது. நீங்கள் அமைச்சராக இருக்கிறீர்கள; எனவே உங்களது பேச்சுகளின் விளைவுகள் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறீர்கள். தற்போது பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தை நாடி இருக்கிறீர்கள் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

உதயநிதி ஸ்டாலின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, பத்திரிகையாளர்கள் அர்ணாப் கோஸ்வாமி, முகமது ஸுபைர், வழக்கறிஞர் நுபுர் சர்மா ஆகியோர் தொடர்பான முந்தைய வழக்குகளை சுட்டிக்காட்டி வாதங்களை முன் வைத்தார்.

சனாதன தர்மம் தொடர்பான வழக்கை எதிர்கொள்ள மாட்டேன் என்று நான் சொல்லவில்லை. மாறாக அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்றுதான் கேட்கிறேன். அனைத்து முதல் தகவல் அறிக்கைகளும் ஒரே இடத்திற்கு, மாற்றப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

court order

என்ன விளைவு ஏற்படும் என்பது எனக்கு முன்பே தெரியும். இந்த விவகாரத்தை நியாயப்படுத்துவது அல்லது எதிர்ப்பது என்பது எதுவும் அல்ல. மாறாக சரியான இடத்தில் விசாரணை நடைபெற வேண்டும் என கேட்பதாகக் கூறினார். முதலில் வழக்கு விசாரணை தொடர்பாக அந்தந்த மாநிலங்களின் உயர் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள் எனக் கூறிய நீதிபதிகள் பிறகு வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிப்பது தொடர்பாக அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறும் என அறிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்