தமிழ்நாடு

``பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இபிஎஸ் தரப்பு அவசரப்படுவது ஏன்?”- உச்சநீதிமன்றம் கேள்வி

நிவேதா ஜெகராஜா

அதிமுக விவகாரத்தில் இபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தத் தடை விதிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது, ஓபிஎஸ் தரப்பில் “அதிமுகவின் அனைத்து பதவிகளையும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் நியமிக்க முடியும். அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டதே விதிமுறைகளுக்கு எதிரானது. பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்கவேண்டும், ஆனால் இந்தப் பொதுக்குழுவில் அது தவறப்பட்டுள்ளது.

கட்சிக்கு தேவையான அனைத்தையும் செய்ய நான் (ஓபிஎஸ்) தயாராக இருந்தேன். ஆனால் என்னை வேண்டாமென வெளியே தள்ள முடிவு செய்துவிட்டனர். அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது, கட்சியின் விதிமுறைகளுக்கு எதிரானது. இதை டிவிஷன் பென்ச் கணக்கில் கொள்ளவில்லை” என வாதிட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள், “இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பில் இருக்கும்போது, பொதுச்செயலாளராக தேர்தல் நடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு அவசரப்படுவது ஏன்?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது. பின் ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்திருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.