தமிழ்நாடு

திமுகவில் உட்கட்சி பூசலா? திருச்சி சிவா வீட்டின் மீது தாக்குதல்!

webteam

நகராட்சி நிர்வாக துறை அமைச்சருக்கும், மாநிலங்களவை குழு தலைவருக்குமான அதிகார போட்டியில், அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள், திருச்சி சிவா வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவாவின் வீடு மற்றும் அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. திருச்சி சிவாவின் இல்லத்திற்கு அருகே பூங்காவிற்காக ஒடுக்கப்பட்ட டென்னிஸ் விளையாட்டு அரங்கத்தினை திறந்து வைப்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு அங்கு வந்தார்.

அப்பொழுது அவரது காரை வழிமறித்த சிவாவின் ஆதரவாளர்கள், திருச்சி சிவாவை அழைக்காமல், அவரது இல்லம் அருகே மைதான திறப்பு விழா நடத்தக்கூடாது என கருப்புக்கொடி காட்டினார்கள். பின்னர் அமைச்சர் கே.என்.நேருவின் காரை வழிமறித்தவர்களை போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து மைதானத்தை திறந்து விட்டு அமைச்சர் கே.என்.நேரு திரும்பிவரும்போது , அவரது கண் எதிரிலேயே அவரது ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் கார் கண்ணாடியை சோடா பாட்டிலால் தாக்கி உடைத்தார்கள். மேலும் வீட்டில் இருந்த நாற்காலிகள், இரண்டு இருசக்கர மோட்டார் வாகனங்கள், வீட்டின் சுற்றுச்சுவரில் இருந்த முகப்பு விளக்குகள், ஜன்னல் கண்ணாடிகள் ஆகியவற்றை உடைத்து நொறுக்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து திருச்சி சிவாவின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிவாவின் வீட்டில் இருந்த அவரது ஆதரவாளர்கள் 10 பேரை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளனர்.