தமிழ்நாடு

சூப்பர் மார்க்கெட் சூறை: பா.ஜ.க. நிர்வாகிகள் உள்ளிட்ட 19 பேர் கைது

webteam

சென்னையில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த 50 பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், ஊழியர்களையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாஜகவை சேர்ந்தவர்கள் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில், வாடகை கட்டடத்தில் ஷா நவாஸ் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இவரது சூப்பர் மார்க்கெட்டிற்குள் திடீரென புகுந்த கும்பல், அங்கிருந்த பழம், காய்கறிகள் உட்பட உணவுப் பொருட்களை சேதப்படுத்தியது. பல்வேறு பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், சூப்பர் மார்க்கெட்டில் பணியில் இருந்தவர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

50 பேர் கொண்ட கும்பலில், பலர் வெளியில் பவுன்சர்கள் போல் பாதுகாப்புக்காக நின்றுள்ளனர். சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளைக் கைப்பற்றுவதாக எண்ணி, பில் போடும் கம்ப்யூட்டரின் சிபியூவை எடுத்துச் சென்றனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், அவர்களில் சிலரை சுற்றி மடக்கிப் பிடித்தனர். இருவர் சிறுவர் என்பதால் எச்சரித்து அனுப்பினர்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த கடை ஊழியர் ஒருவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்‌கப்பட்டார். விசாரணையில் தாக்குதல் நடத்தியவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் கலை இலக்கியப் பிரிவைச் சேர்ந்த குணசேகரன், மத்திய சென்னை மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் காமேஸ்வரன் என்பது தெரியவந்ததை அடுத்து அவர்கள் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர். கடை உரிமையாளர் ஷா நவாஸ் மற்றும் கட்டட உரிமையாளர் ரஃபிகா இடையே வாடகை பிரச்னை உள்ள நிலையில், இந்தத் தாக்குதல் குறித்து ரஃபிகாவிடம் விசாரணை நடந்து வருகிறது.