நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் pt web
தமிழ்நாடு

”அமைச்சர்கள் மீதான சூமோட்டோ வழக்குகளை நானே விசாரிக்கிறேன்”-நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கொடுத்தஅறிவிப்பு

webteam

செய்தியாளர்: முகேஷ்

சொத்து குவிப்பு வழக்கில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோர் விடுவிக்கப்பட்டது மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி, விடுதலை செய்யப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார்.

kkssr, thangam thennarasu

அதேபோல முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளையும் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். இதற்கு எதிராக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்குகளை யார் விசாரிப்பது என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ப.வளர்மதிக்கு ஆகியோருக்கு எதிரான வழக்குகள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

OPS

அப்போது, முன்னாள், இந்நாள் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளை விசாரிக்கும்படி, தலைமை நீதிபதி, தனக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாகக் கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த நான்கு வழக்குகளும் பிப்ரவரி 27, 28,29, மற்றும் மார்ச் 5 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவித்தார்.

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கின் விசாரணை பிப்ரவரி 12, 13 ஆம் தேதியும், முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு பிப்ரவரி 19 முதல் 22 ஆம் தேதி வரையும் விசாரிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் விசாரணை துவங்க இருந்த நிலையில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்குகளுக்கு மட்டும் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.