தமிழ்நாடு

அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமாருக்கு வருமான வரித்துறை சம்மன்

webteam

தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி ஆகியோருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பணப்பட்டுவாடா நடப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறின. இது தொடர்பாக வீடியோ ஆதாரங்களும் வெளியாயின. இதையடுத்து தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத் துணை வேந்தர் கீதா லட்சுமி ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், பணப்பட்டுவாடா நடந்திருப்பது உறுதியானது.

அதன் அடிப்படையில், ஆர்.கே.நகரில் உள்ள மொத்த வாக்காளர்களில், 85 சதவிகித பேருக்கு பணப்பட்டுவாடா செய்வதை இலக்காக வைத்தும் ‌அங்கு தொகுதியில் மொத்தமுள்ள 7 வார்டுகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு பொறுப்புகள் பிரித்து தரப்‌பட்டதாகவும் தெரிய வந்தன. மொத்தமுள்ள 256 பாகங்களில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 696 வாக்காளர்களில், 85 சதவிகிதமான 2 லட்சத்து 24 ஆயிரத்து 145 பேருக்கு, தலா 4 ஆயிரம் என்ற கணக்கில் மொத்தம் 89 கோடியே 65 லட்சத்து 80 ஆயிரம் என ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதில் பணம் என்று குறிப்பிடப்படவில்லை.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் விவரங்களை இந்திய தலைமை தேர்தல் அணையத்துக்கு வருமான வரித்துறை அனுப்பியது. அதை தேர்தல் கமிஷன் ஆய்வு செய்து வந்தது. இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், கீதாலட்சுமி ஆகியோருக்கு வருமான வரித்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது. நாளை காலை சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.