students
students pt desk
தமிழ்நாடு

‘விட்டாச்சு லீவு...’ தமிழ்நாட்டு சுட்டிகளுக்கு நாளை முதல் தொடங்குது கோடை விடுமுறை!

Kaleel Rahman

தமிழ்நாட்டில் பள்ளிகள், ஜூன் தொடக்கத்திலிருந்து தொடங்கி ஏப்ரல் மாதம் இறுதி வரை நடைபெறும். இதையடுத்து மே மாதம் கோடை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த ஆண்டு பள்ளி சற்று தாமதமாக கடந்த ஜூன் 13 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து மார்ச் 13 ஆம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. அதேபோல் பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி முடிந்தது.

மாணவர்கள்

இதன் பிறகு ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 20 ஆம் தேதி முடிந்தது. இதேபோல் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் அந்தந்த மாவட்ட வாரியாக ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதையடுத்து அனைத்து வகுப்புகளுக்குமான தேர்வுகள் தற்போது நிறைவடைந்துள்ளது.

students

இதையொட்டி நடப்புக் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளுக்குமான வேலைநாள் இன்றுடன் (ஏப்ரல் 28) நிறைவு பெறுகிறது. இதையடுத்து குழந்தைகளுக்கு நாளை முதல் (ஏப்ரல் 29) கோடை விடுமுறை தொடங்குகிறது. இந்த ஒரு மாதம் விடுப்பு முடிந்து வழக்கம் போல ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்கிடையே தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிகிறது.