தமிழ்நாடு

குழந்தையை மீட்க போராடும் தாயின் ‘பாசப் போராட்டம்’

webteam

குழந்தையை மீட்பதற்கான பையை தாய் கலாமேரி தைக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. 

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணி சுர்ஜித் என்ற இரண்டு வயது குழந்தை தவறி விழுந்தது. சுமார் 17 மணி நேரத்திற்கு மேலாக குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதலில் 26 அடி ஆழத்தில் இருந்த குழந்தை பின்னர் 70 அடிக்கு சென்றதால் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. 

அத்துடன், குழாயில் மண் சரிந்து மூடப்பட்டதால் மேலும் சிக்கல் உண்டானது. இடுக்கி போன்ற கருவி மூலம் மண்ணை அகற்றிவிட்டு குழந்தையை மீட்கும் முயற்சி தீவிரம் காட்டப்பட்டு வருகின்றது. இதனிடையே, மண் மூடப்பட்டதால் ஆழ்துளை கிணற்றில் இருக்கும் குழந்தை சுர்ஜித் அசைவின்றி காணப்படுவது கவலை அளிக்கின்றது. இந்தச் சூழலில் மீட்புப் படையினர் துணி பையை வைத்து குழந்தையை மீடக முடிவு செய்தனர்.

இதற்காக மீட்புப் படையினரின் வேண்டுகோளுக்கு இணங்க குழந்தையின் தாய் கலாமேரி குழந்தையை மீட்க போகும் துணிப்பையை தைக்கும் படம் வெளியாகியுள்ளது. இவர் தைக்கும் இந்த துணி பையை வைத்து குழந்தையை மீட்க மீட்பு படையினர் தற்போது திட்டமிட்டுள்ளனர்.

மகனுக்காக ஒரு தாய் நடத்தும் பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ள இந்தப் புகைப்படம் பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கிறது.