தமிழ்நாடு

“என் மகனுக்காக ஒரு கோயில் கட்ட வேண்டும்”  - சுஜித் தாய் ஆசை 

“என் மகனுக்காக ஒரு கோயில் கட்ட வேண்டும்”  - சுஜித் தாய் ஆசை 

webteam

தன் மகனுக்காக ஒரு கோயில் கட்டி வழிபட உள்ளதாக சுஜித்தின் தாய் கலாமேரி கூறியுள்ளார். 

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித், 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் தோல்வி அடைந்ததால் உயிரிழந்தான். சுஜித், உடல் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பின், சுஜித்தின் உடல் நடுக்காட்டுப்பட்டி, பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சுஜித்தின் மறைவுக்கு பொதுமக்கள், அரசியல், திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சுஜித் புகைப்படத்திற்கு இன்று முதலமைச்சர் பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார். நடுக்காட்டுப்பட்டுக்கு வருகை தந்த முதலமைச்சர், சுஜித் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை மற்றும் அமைச்சர்கள் உடன் இருந்தனர்.

இந்நிலையில் சுஜித்தின் பெற்றோர் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்துள்ளனர். சுஜித்தின் தாய் கலாமேரி

, “எங்களால் முடிந்த வரை முயற்சி செய்தோம். உலகத்தில் உள்ள எல்லா சாதனங்களையும் பயன்படுத்தினோம். ஆனால் என் மகன் உயிரை மீட்க முடியவில்லை. இந்த விஷயம் என் மகனோடு முடியட்டும். வேறு யாருக்கும் நடக்கவே கூடாது. இதுவே கடையாக இருக்கட்டும். என் மகனுக்காக கோயில் கட்ட வேண்டும் என்பதே என் விருப்பம்” என்று கூறியுள்ளார். 

மேலும், அவரது தந்தை ஆரோக்கியதாஸ், “ என் மகனுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. தமிழக அரசு முயன்றவரை முயற்சி செய்தது. என் மகனை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி” என்று கூறியுள்ளார்.