தமிழ்நாடு

மக்களவைத் தேர்தல் : நாம் தமிழர் கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம்

webteam

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், கூட்டணி முடிவுகள், போட்டியிடும் தொகுதி அறிவிப்புகள் என தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்டு, தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், பல இடங்களில் பணம், பொருட்கள் பறிமுதல் வருகின்றன. இதற்கிடையே அங்கீகாரம் கிடைக்காத சில கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் தகவல்களும் வெளியாகிவருகின்றன. 

சில நாட்களுக்கு முன்னர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘டார்ச் லைட்’ சின்னம் வழங்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டிருந்த மோதிரம் வழங்கப்படவில்லை. அதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே சீமான் ஒருங்கிணைப்பாளராக உள்ள நாம் தமிழர் கட்சிக்கு, அவர்கள் கேட்டிருந்த இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக வேறு சின்னம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தற்போது நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் இதே சின்னத்தில் அக்கட்சி போட்டியிடவுள்ளது.