தமிழ்நாடு

திடீரென விசைப்படகில் ஏற்பட்ட தீ விபத்து: தத்தளித்த 14 மீனவர்களை மீட்ட சகமீனவர்கள்

kaleelrahman

கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்று திரும்பிய விசைப்படகில் தீ விபத்து ஏற்பட்டது. விசைப்படகில் இருந்த 14 மீனவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. சுமார் 20 கடல் மைல் தொலைவிற்கு மேல் சென்று மீன் பிடித்து வரும் மீனவர்கள், இரவில் கரைதிரும்புவது வழக்கம். இந்நிலையில் நேற்று சகாய அந்தோணி என்பவரது விசைப்படகில் 14 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பியுள்ளனர்.

அப்போது துறைமுகத்தில் இருந்து சுமார் 4 கடல் மைல் தொலைவில் வரும்போது படகு இன்ஜினில் திடீரென தீ பற்றியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தால் படகு முழுவதும் தீப்பற்றி எரியத் துவங்கியுள்ளது. இதனையடுத்து எரியும் விசை படகில் தத்தளித்த 14 மீனவர்களை, கரைதிரும்பி கொண்டிருந்த சகமீனவர்கள் மீட்டனர். இதனால் உயிர்சேதம் அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது.

இதில், சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான விசைப்படகு முற்றிலும் எரிந்து நாசமானது. இவ்விபத்து குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.